Sunday, April 26, 2015

சுடுவோம், தடுப்போம் ஒருபக்கம். போராடுவோம், மனுகொடுப்போம் மறுபக்கம். மாற்றி சிந்திப்போமா, செயல்படுவோமா? - வெ. பொன்ராஜ் vponraj@gmail.com

சுடுவோம், சுடுவோம் மீனவர்களை சுடுவோம், ஆந்திராவில் அப்பாவி தொழிலாளர்களை சுடுவோம்,  தடுப்போம், தடுப்போம், தண்ணீர் கொடுப்பதை அணை கட்டி தடுப்போம், கொடுக்கமாட்டோம், தண்ணீர் தரமாட்டோம் – தமிழகத்தை சுற்றி எச்சரிக்கை சத்தம், அழித்தொழிப்பு  நடவடிக்கை தொடர்கிறது.  இன்று நேற்றல்ல, இது பல ஆண்டுகளாக நடக்கிறது.  

சுடாதே, மனித உரிமை மீறல், தடுக்காதே, அணை கட்டாதே – நம்மிலிருந்து போராட்டம், வாக்குவாதம், விவாதம், மத்திய அரசுக்கு கோரிக்கை, நீதிமன்றத்தில் வழக்கு, அறிக்கை, இது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கிறது.   
நாம் போராடிக்கொண்டே இருக்கிறோம், விவாதித்துக்கொண்டே இருக்கிறோம், ஆனால் பக்கத்து மாநிலமாக இருந்தாலும் சரி, அண்டை நாடாக இருந்தாலும் சரி அவர்கள் செய்வதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு நிலைமைக்கும் காரணம் என்ன என்று யோசித்து பார்க்கும் போது. இப்படிப்பட்ட அவல நிலைக்கு தமிழனை ஆளாக்குவதற்கு, தமிழனை பலி கொடுப்பதை தடுப்பதற்கு நாம் செய்தது என்ன, இந்த சூழ்நிலையை இனிமேலும் வாரமால் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன.

ஏமாற்று அரசியல்
வறுமை, வேலைவாய்ப்பின்மையின் பிடியல் வாடும் மக்கள், வாழ்க்கையை வாழ, தன் குழந்தைகளை நல்ல படியாக உருவாக்க விளையும் சாதாரண மனிதன் உயிரை பணயம் வைத்து உழைக்க தயாராக இருக்கிறான், ஆனால் அவனது உழைப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்பு இல்லை, அவனது உழைப்பிற்கு ஏற்ற விவசாயம் இல்லை, அவனது உழைப்பிற்கு ஏற்ற தொழில் இல்லை,  மீனவர்கள் வாழ்வாதரத்தை உயர்த்தும் அளவுக்கு அவர்கள் தொழிலில் எவ்வித ஒரு மாற்றமும் இல்லை.  

மண்ணை நம்பி தொழில் செய்து பிழைக்கும் தொழிலாளர்கள் கண்மாயில் மண் எடுத்து தொழில் செய்ய இயலாமல், தினமும் போராடி சாகிறார்கள். அதிகார வர்கத்தோடு போராட இயலாமல், வேறு கூலி வேலைக்கு செல்லும் நிலைமை வந்து பல நாட்கள் ஆகிறது.  ஆனால் மண்ணை கடத்தி, அரசை ஏமாற்றும் மணல் கொள்ளையர்கள், வளமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.  இது எதைக்காட்டுகிறது, மணலை கொள்ளையடித்து அரசை ஏமாற்று, கடத்து உனக்கு அனைத்து பாதுகாப்பும் உண்டு.  மண்ணை வைத்து தொழில் செய்தாய் என்றால் உனது தொழிலுக்கும் பாதுகாப்பு இல்லை, உண் உயிருக்கும் பாதுகாப்பில்லை. என்ன செய்வார்கள அப்பாவி மக்கள். என்ன செய்வார்கள் அப்பாவி இளைஞர்கள்.

உழைக்க தயாராக இருந்தால் அவன் வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை. ஏமாற்றி பிழைக்க தயாராக இருந்தால் இந்த நாடே உனக்கு பின்னால் நிற்கும் என்ற நிலைமையை வரும் கால இளைய சமுதாயம் தவறாக புரிந்து கொண்டால், இந்த நாட்டின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்.

என்ன மாதிரியான சமூகத்தில் நாம் இருக்கிறோம்.

தொழிலாளர்கள் பலிகடாவாகலாமா
செம்மரக் கடத்தல் கும்பலின் ஆசை அறியாது, கூலி கூட கிடைக்கும் என்று வயிற்று பிழைப்புக்காக மரம் வெட்ட சென்றால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை. 67 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஜனநாயக நாட்டிலே 20 அப்பாவிகளை எரித்து, அடித்து, மூளையை சிதறசெய்து, நெஞ்சிலே சுட்டு படுகொலை செய்து விட்டு, கொலை செய்யப்பட்டவர்களின் உடலை ஒரு காட்டில் போட்டு விட்டு,  என்கவுண்டர் என்று மூடி மறைத்து,  விசாரணை கமிஷன் அறிக்கை வரும், வந்தபின் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லும் வாய்ப்பு ஒரு ஆந்திர அமைச்சருக்கு இருக்கிறது என்றால்.  அதை தட்டிக்கேட்கும் தைரியமும், நடந்த படுகொலை இரண்டு மாநிலங்களுக்கு சம்மந்தப்பட்டது என்றால், மத்திய அரசும், மனித உரிமை ஆணையமும் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டுமல்லவா.  நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம், ஏனென்றால் ஜனநாயக நாட்டில் யாரும் சர்வாதிகாரமாக நடக்க முடியாது.

செம்மர கடத்தலில் ஈடுபட்டதினால் சுட்டுக்கொல்வோம் என்றால், அதை நியாயப்படுத்தினால்,  அதை மாதிரி ஏட்டிக்கு போட்டி என்று தமிழக அமைச்சரும் பேசினால், பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமா.  இல்லை மாநிலங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் வருமா. இல்லை அப்படி ஏட்டிக்கு போட்டி என்று பேச முடியுமா, அதுவல்ல ஜனநாயகம் கொடுத்த பேச்சுரிமை. மக்கள் மன்றத்தில் அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும். 

மீனவர்கள் யாசகம் பெறுவர்கள் அல்ல
இந்திய தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுடுவோம் என்று சொல்லும் அண்டை நாட்டு அமைச்சருக்கு, இது வரை இந்திய கப்பல் படை அன்னிய நாட்டு மீனவர்களை சுட்டு பார்த்து உண்டா.  இந்தியா ஒரு பொறுப்பான நாடு என்பதை இது வரை இந்திய கடற்படை எவ்வித எதிர்தாக்குதலிலும் ஈடுபடாமல், இந்தியாவின் மதிப்பை காத்து வருகிறது. அதை விடுத்து மற்ற நாட்டு அமைச்சர்களைப் போல் பொறுப்பில்லாமல் பதில் பேச முடியாது. ஏனென்றால், இந்திய பிராந்தியத்தில், இந்தியாவில் மட்டும் தான் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. இந்தியா சுற்றியிருக்கும் அனைத்து நாடுகளிலும், ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை.  இந்திய பிராந்தியத்தில் நம்மைச் சுற்றி உள்ள நாடுகளில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு நம் நாட்டிற்கு உண்டு.  அப்படி ஒரு ஜனநாயக ஆட்சிமுறை நிர்வாகம் இலங்கையில் வந்தால் மட்டுமே, இந்த பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண முடியும். 

சரி அதற்கு நாட்கள் ஆகும், ஆனால், இந்தியா ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தால், நம் இந்திய மீனவர்கள் பலிகடா ஆவது தடுக்கப்படும், அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். 

ஜஸ்லாண்டு என்ற நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் 6 சதவீகிதம் ஆழ் கடல் மீன்பிடித்தல் தொழிலில் இருந்து வருகிறது. 2005ல் இருந்து ஆழ் கடல் மீன்பிடித்தலுக்கு உரிய கட்டமைப்பை 7000 கி.மீட்டர் கடல் சுற்றளவு இருக்கும் இந்தியாவில் உருவாக்குங்கள், மீனவர்களின் வாழ்வில் புது தொழில் நுட்பத்தை புகுத்துங்கள் என்று டாக்டர் அப்துல் கலாம் சொல்லாத ஆட்சியாளர்கள் இல்லை, இன்று வரை அந்த வாய்ப்பு நம் மீனவர்களுக்கு கிடைக்க வில்லை.

ஆழ்கடலில் மீன்பிடிக்க தேவையான சக்திவாய்ந்த படகுகள்,  1000 டன் டிராய்லர்ஸ், ஆழ்கடலில் மீன்பிடித்து, அங்கேயே பதப்படுத்தி, பக்குவப்படுத்தி, ஏற்றுமதி செய்யும் தொழில் நுட்பத்தை நம் மீனவர்களுக்கு ஏன் இது வரை செய்ய யாரும் முன்வரவில்லை.  ரூ 111 லட்சம் கோடியில் வரவு செலவு திட்டம் போட்டு இந்தியாவை வழிநடத்தும் தலைவர்கள்,  இந்திய பொருளாதாரத்தில் 8 சதவிகித வருமானம் ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் ஏற்றுமதி கட்டமைப்பினால் வரும் என்று நம்பினால் இது நடந்திருக்கும். 

மீனவர்களையும், விவசாயிகளையும், மற்ற தொழிலாளர்களையும் நம் நாட்டின் வளர்ச்சிக்கான சொத்து என்று என்றைக்கு ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களோ, அன்றைக்குதான் அவர்களுக்கு தேவையான பொருளாதார கொள்கை வகுக்கப்படும். அப்படி நடந்தால் மட்டுமே, தொழில் கட்டமைப்பு, தொழில் நுட்ப மற்றும் பொருளாதார கட்டமைப்பு, நிதி ஆதார கட்டமைப்பு, போக்குவரத்து கட்டமைப்பு, ஏற்றுமதி கட்டமைப்பு உருவாக்கப்படும். 

ஆனால் விவசாயியையும், மீனவர்களையும், தொழிலாளர்களையும், அரசை நோக்கி கையேந்துபவர்கள் என்று கொள்கை வைத்திருப்பதினால்தான் அவர்களுக்கு தள்ளுபடி கொடுத்தால் போதும், பாதிப்பு தொகை கொடுத்தால் போதும், நஷ்ட ஈடு கொடுத்தால் போதும் என்ற கொள்கையை வகுத்து உழைக்கும் வர்க்கத்தை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். 

எனவே ஆட்சிகள் மாறலாம், ஆனால் தள்ளுபடி கொள்கைகள் மாறி, பறிக்கும் கொள்கைகள் மாறி, உள்ளார்ந்த வளர்ச்சி சார்ந்த கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.  அப்படி மாறினால்தான் விவசாயிகளின் வாழ்க்கையில், மீனவர்களின் வாழ்க்கையில், தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றம் வரும். 

அதாவது, விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் இந்த நாட்டின் சொத்து, அவர்களை வாழ்வுக்கும், தொழிலுக்கும், வாழ்க்கைக்கும், கடனுக்கும் கையேந்த விடமாட்டோம் என்ற கொள்கை நிலைப்பாட்டை நம்மை ஆள்பவர்கள் எடுக்க வேண்டும்.    

அவர்களை உழைக்க  வழி சொல்வோம், பிழைக்க வழி சொல்வோம், அவர் உரிமைப் பொருள்களை தொடமாட்டோம் நிலம் உட்பட என்ற நிலை வரவேண்டும். 

விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு – தண்ணீர் அடிப்படை

நதியின் தன்மை பல்வேறு நிலப்பரப்பை தாண்டி சென்று கடலில் கலப்பது தான். நதிகள் மனித சமுகத்தை உருவாக்கிய தாய்.  பல்வேறு மாநிலங்களில் ஒடும் நதிகளின் உரிமையானது, மற்றும் அதில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பது மத்திய அரசுதான். பல்வேறு நாடுகளுக்கு இடையே ஒடும் நதிகளின் தன்மையை, அவற்றின் போக்கை நிர்வாகிக்க இன்டர் நேஷனல் ஒப்பந்தங்கள் உண்டு.

ஜனநாயக நாட்டில் நதி நீர் ஒப்பந்தங்களை அப்பட்டமாக மீறி, நதி நீர் ஆணையத்தின் அரசியல் சாசன சட்டத்திற்கு இணையான தீர்ப்பை மீறி அணைகளை எங்கள் இஷ்டத்திற்கு கட்டுவோம், அதை யாரும் கேட்க முடியாது என்று செயல்பட்டு இது வரை பல்வேறு அணைகள், கர்நாடகத்தில் கட்டப்பட்டும் விட்டது.  தமிழகத்திற்கு வந்த தண்ணீரின் அளவு 400 டி.எம்.சியில் இருந்து, இன்றைக்கு வருடத்திற்கு 100 டி.எம்.சி அளவு கூட வருவது கிடையாது, வெள்ளம் வந்தால் ஏதோ கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியாமல் போகும் தண்ணீர் தமிழகத்திற்கு வரும், இல்லை என்றால், காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு, பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு மத்தியில் அரசிதழில் வெளியிடப்பட்டாலும், அதை அமுல் படுத்தமாட்டோம் என்று கூறி, அரசியல் சாசன சட்டத்தை மீறும் உரிமை கர்நாடகத்திற்கு இருந்தால், அதை தட்டிக்கேட்கும் வல்லமை மத்திய அரசிற்கு இல்லை என்றால்,  அதே தொனியில் பதிலடி கொடுக்க தமிழக அரசு முயன்றால், நீதி எங்கே நிலை நாட்டப்படும். 

வேறு தீர்வு இல்லையா.  ஜனநாயகம் அதற்கு தான் மக்களாட்சி முறையை கொடுத்திருக்கிறது, மத்திய அரசு, மாநில அரசு என்று வரைமுறை படுத்தி, ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரங்களை கொடுத்து, அதை பயன் படுத்தி நாட்டில் அமைதி நிலவ வேண்டும், யாருக்கு சர்வாதிகாரம் என்ற நிலைமை இருக்க கூடாது என்பது தான் நாம் 67 ஆண்டுகளாக அனுபவித்து வந்திருக்கும் ஜனநாயகத்தின் பலம். அந்த பலத்தை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சரியாக பயன்படுத்துகிறார்களா என்பது தான் இங்கே கேள்வி.

நான் பிறந்து, எனக்கு விவரம் தெரிந்த கடந்த 40 ஆண்டுகளாக, நான் கேட்கும் கோஷங்கள் பல, இன்றைக்கும் அதே கோஷங்கள் கேட்கிறது, நாளைக்கும் நம் வருங்கால தலைமுறையும் அதே கோஷங்களை கேட்கும் என்றால், அப்படிப்பட்ட சூழ்நிலையை இனிவரும் தலைமுறை மாற்றும், அப்படிப்பட்ட அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் கலைந்து எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

காவிரி நீரை பெற்றுத்தருவோம், காவிரியில் கர்நாடக அணைகட்டுவதை தடுப்போம்.  இந்த கோஷம், கடந்த 40 வருடங்களாக வருடம் தோறும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

1991ல் கர்நாடாகவில் ஒட்டு மொத்த நீர் பாசன பயிர் பகுதி 11.20 லட்சம் ஏக்கர், இன்றைக்கு 20 லட்சம் ஏக்கராக கர்நாடக பாசனத்தை உயர்த்திவிட்டார்கள்.

இது வரை காவிரியில், கொள்ளிடத்தில் ஒரு தடுப்பணை கூட கட்ட வில்லை தமிழகம்.  5500 கோடியில் தமிழக நதிகளை இணைக்க முடியும் என்ற திட்டத்தை மத்திய அரசு நிதி தரவில்லை என்று சொல்லி கிடப்பில் போட்டிருக்கிறோம்.  தமிழகத்தின் ஒரு வருட பட்ஜெட்டில் 5 சதவீகித நிதியை ஒதுக்கி, தமிழக நதிகளை இணைக்க முடியவில்லை கடந்த 20 வருடத்தில்.

வருடா வருடம் 40 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகிறது, காவிரியில் வெள்ளம் வரும் காலங்களில் 200 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கர்நாடகா மாநிலம்,  இன்னும் 2 அணைகள் கட்டினால், தமிழகம் வறண்ட மாநிலமாக மாறும், 17 லட்சம் ஏக்கர் பாசனம் வறண்டு விடும்.   தமிழக நதிகள் இணைக்கப்பட்டு, கொள்ளிடத்தில் 2 தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தால்?  900 கி.மீட்டர் தமிழக அதி திறன் நீர் வழிச்சாலையின் மூலம், பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி அணைகள் இணைக்கப்பட்டிருந்தால் 4 வருடத்திற்கு ஒரு முறை வரும் வெள்ள நீரை, தாமிர பரணியில் தொடர்ந்து வீணாகும் நீரை,  தமிழக நதிகளில், காவிரியில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தால்?   இன்றைக்கு 3 போகம் விவசாயம் தமிழகத்தில் நடந்திருக்கும், விவசாய தொழிலாளர்கள் தங்கள் வயிற்றுக்காக செம்மரம் வெட்ட சென்று இன்றைக்கு படுகொலைக்கு ஆளாகாமல், தப்பித்திருப்பார்கள்.

வீம்புக்கு மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடாக அரசு, இதுவரை கட்டிய அணைகளை போலவே இதையும் கட்டும், இது வரை கட்டப்பட்ட அணைகளை தடுக்க இயலாமல் போன மத்திய அரசும் இதையும் தடுக்காது.  தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் சர்வ கட்சி தூது பிரதமரை சந்தித்து மனு கொடுக்கும்.  கடைசியில் உச்ச நீதிமன்றம் வரை தமிழக அரசு செல்லும். இன்னும் 20 வருடம் வழக்கு நடக்கும், 2035ல் தமிழகம் வரண்டு பலைவனமாகும், காவிரியில் தண்ணீர் வராது.  இதுவா நம் வருங்கால சமுதாயத்திற்கு விட்டு செல்லும் வளமான தமிழகம்.

உண்மையிலேயே கர்நாடக அரசு கர்நாடக விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டு மென்றால், கர்நாடகாவில் வருடாவருடம் 2200 டி.எம்.சி தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. அதை திருப்பி அனைவருக்கும் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மேற்கே வீணாகும் இந்த தண்ணீரை கர்நாடாகவின் திறன் வாய்ந்த hydrologist Dr Bhavani Shankar (Late) கொடுத்த திட்டத்தின் படி Pumped Storage Scheme (System) மூலம் செயல் படுத்தினால், கர்நாடகவின் மேற்கு பகுதியில் தடுப்பணைகள் கட்டி, 2200 டி.எம்.சி தண்ணீரை கிழக்கு பகுதிக்கு பம்ப் செய்து மேலேற்றி கேமாவதியில் கொண்டு வந்து, அங்கிருந்து கிருஷ்ணராஜ சாகர் டேமிற்கு கொண்டு வந்தால், கர்நாடாகவும் பலன் பெறும், தமிழ்நாடும் பயன் பெறும்.  தண்ணீர் பற்றாக்குறை தான் பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. வீணாகும் தண்ணீரை சேமித்தால், மாற்றி பயன் படுத்தினால் அனைவருக்கும் பலன் கிடைக்கும், இரண்டு மாநிலங்களிலும் விவசாயம் செழிக்கும், அமைதி பிறக்கும்.

பிரச்சனைகளை பிரச்சனைகளாக பார்த்தால் 40 வருடம் ஆனாலும் தீர்வு கிடைக்காது என்பது கடந்த 40 ஆண்டு கால அரசியல் வழி முறைகள் உணர்த்தும் பாடமாக இருக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வை சிந்தித்தால், மாற்றி யோசித்தால், அப்படிப்பட்ட தலைவர்களை மக்கள் பெற்றால் தான், அடுத்த தலைமுறைக்கு நாம் அமைதியான நாட்டை, வளமான நாட்டை விட்டுச்செல்ல முடியும்.

மாற்றி சிந்திப்பார்களா, இல்லை மாற்றி சிந்திக்க வைக்க வேண்டுமா என்பது இன்றய இளைஞர்கள் முன்னால் உள்ள கேள்வி. 

மக்களும், இளைஞர்களும் மாற்றி சிந்தித்தித்தால் தான், அரசியல் தலைவர்களும் மாற்றி சிந்திப்பார்கள்.  எல்லாவற்றையும் இழந்து விட்டு வருத்தப்படுவதில், போராடுவதில், மனு கொடுப்பதில் எவ்வித பயனும் இல்லை.   

இது என் தனிப்பட்ட கருத்து. 

வெ. பொன்ராஜ்

No comments:

Post a Comment