நமது சிறு தொழில்களை பலப்படுத்தினால் தான் உலக சந்தையோடு போட்டியிட முடியும்.
இது உண்மையா?
குடிசை
தொழில்கள் ஒழிக்கப்படும், சிறு தொழில் செய்வோர்கள் இனிமேல் கோடீஸ்வரர்களாக
போகின்றனர்....
இது உண்மையா?
ஊறுகாய்,
சட்னி, மசால், மர
சாமான்கள், வளையல், சோப்பு, சீப்பு,
மஸ்டர்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், நோட்டு புத்தகம், கணக்கு நோட்டு, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, பட்டாசு, அகர்பத்தி செய்பவர்களுக்கு இனிமேல், கோடிக்கணக்கில் வெளிநாட்டு முதலீடு வந்து குவியப்போகிறது.
மஸ்டர்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், நோட்டு புத்தகம், கணக்கு நோட்டு, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, பட்டாசு, அகர்பத்தி செய்பவர்களுக்கு இனிமேல், கோடிக்கணக்கில் வெளிநாட்டு முதலீடு வந்து குவியப்போகிறது.
எனவே,
படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வாய்ப்பற்றவர்கள், தாங்கள் பிழைப்பிற்காக உறுவாக்கிய சிறு, குறு
நிறுவனங்கள், இனிமேல் மத்திய அரசின் தாராளமயமாக்கல்
கொள்கையின் விளைவால், கோடிக்கணக்கில் வரும் அன்னிய
முதலீட்டால் தாங்கள் சிறு தொழில்களை நவீன மயமாக்கி அடுத்த வருடத்தில் கோடிஸ்வரராகி
விடுவார்கள் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த வாரம், தமிழகத்தில்
சிறு தொழில் முனைவோர்கள் சிலரை சந்தித்தேன். அவர்களது உள்ளக்குமுறல்களை இங்கே
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இது நடக்குமா?
மக்களது
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி பண்ணும் நமது இந்திய சிறு மற்றும்
குறுந்தொழில் நிறுவனங்கள், ஊறுகாயை, தீப்பெட்டியை, பட்டாசை, அகர் பத்தியை,
மெழுகுவர்த்தியை, மரச்சாமான்களை தரமான பொருட்களாக, அதிக அளவில் உற்பத்தி பண்ணி, உலக
சந்தைக்கு ஏற்றுமதி செய்ய எந்த தொழில் நுட்ப உதவியும், பொருளாதார வழிமுறையும்
இல்லாத நிலை இன்று இருக்கிறது. சீனா,
மலேசியாவில் இருந்து பல்வேறு வீட்டு சாமான்கள், வீட்டு உபயோக பொருள்கள்,
இந்தியாவிற்கு இறக்குமதியாகிறது. இந்தியாவில் இருக்கும் சிறு, குறும்
தொழிலாளர்கள், தங்களுக்கு தெரிந்த தொழில் நுட்பத்தில் பொருட்களை உற்பத்தி செய்து
இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள்.
இறக்குமதியில் இருந்து தப்பித்து இன்றைக்கு 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு
கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஏனென்றால்
இந்த குடிசைத்தொழில்களுக்கு பாதுகாப்பை அரசு இது வரை உறுதிப்படுத்தியிருந்தது.
ஆனால் இப்போது,
இந்த 20 சிறு மற்றும் குறுந்தொழில்களை
பாதுகாப்பான தொழில்கள் என்ற நிலையில் இருந்து அகற்றி, இந்த துறையில் பெரிய
நிறுவனங்கள் உற்பத்தி செய்ய அனுமதி, அன்னிய முதலீட்டிற்கு அனுமதி என்று மத்திய
அரசு அறிவித்திருக்கிறது. சிறு தொழில்
மூலம் உற்பத்தியாகும் பொருள்களை, பெரும் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து, அதில்
50 சதவீகிதற்கு மேல் ஏற்றுமதிக்கும், 50 சதவீகதம் உள்நாட்டு விற்பனைக்கும் வழி
வகுத்திருக்கிறது.
இதன் சாதக பாதகங்கள் என்ன?
இந்தியாவில்
உற்பத்தியாகும் பொருள்களை, உலக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், மத்திய
அரசு இப்பொழுது இந்தியாவில் தொழில் செய்யும் சிறு மற்றும் குறுந் தொழில்
நிறுவனங்களுக்கு ஒரு பொது கொள்கையை வகுத்து, அந்த தொழில்கள் உலக தரத்தோடு போட்டி
போட்டு வளர தடைகற்களாக இருக்கிற கொள்கைகளை தளர்த்தி, அவர்களுக்கு தொழில் நுட்ப
உதவி கொடுத்து, தேவையான வங்கி கடன் கொடுத்து, அல்லது தனியார் முதலீட்டை ஊக்கு
வித்து அவர்களை உலகத்தரமான கம்பெனிகளோடு போட்டி வளரும் வழிமுறையை முதலில்
தரவேண்டும். நமது இந்திய சிறு மற்றும் குறுந்தொழில்களை,
குழுவாக இணைந்து தயாரிக்கும் பெரும் தொழில்களாக மாற்றினால், நமது சிறு மற்றும்
குறும் தொழில்கள் உலக சந்தைக்கு போட்டியிட தயாராகும். பல சிறு மற்றும் குறும் தொழில்கள் இன்னமும்
பதிவு செய்யப்படாமல் இருக்கிறது என்பது உண்மை, ஏனென்றால், வரி விதிப்பில் எவ்வித
சலுகையும், தொழில் செய்வதற்கு வெளிப்படையான ஆக்கமும், ஊக்கமும் கொடுக்கப்படாததாலும், சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர்களை மிரட்டி லஞ்சம் பெறுவது
தொடர்வதாலும், இன்றைக்கும் இந்த தொழிலில் அமைப்பு சாராமல் தொழில் நடைபெருகிறது. அதன் குறைகளை கண்டறிந்து களையாமல், சிறு தொழில்களை பெரிய தொழில்களோடு போட்டி போட்டு நில், இல்லையென்றால் ஒழிந்து போ என்று கை கழுவுவதற்கு சமமாகும்.
இதை
எதுவும் செய்யாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 8 சதவிகிதம் பங்களித்து,
உற்பத்தி துறையில் அளவில் 45 சதவிகிதம் பங்களித்து, 48 மில்லியன் தொழிலாளர்களுக்கு
வேலை வாய்ப்பை கொடுத்து, ஏற்றுமதியில் 40
சதவிகிதம் என்று இருக்கும் 35 மில்லியன் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை
அழிவதற்கு வழி வகுத்து, உலகப் பெரும் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து இந்த சிறு
தொழில் நிறுவனங்களை, அசுர பலம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நீங்கள் போட்டி
போட்டு வளருங்கள் என்று சொன்னால், அது எப்படி இருக்கிறது என்றால், முடவனை,
பலசாலியோடு மோத விட்டு முடவனை அழிப்பதற்கு சமம்.
இந்த நிலையை எண்ணும் போது எனக்கு கீழ்கண்ட பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
இந்த நிலையை எண்ணும் போது எனக்கு கீழ்கண்ட பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
மயிலாட, வான்
கோழி தடை செய்வதோ
மாங்குயில்,
பாட கோட்டான்கள் குரல் சொல்வதோ
முயற்
கூட்டம், சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ.
உயிருக்கு
நிகர் இந்த நாடல்லவோ
அதன்
உரிமைக்கு, உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும்,
நெருப்புக்கும் திரைபோடவோ
மக்கள்
எண்ணத்திற்கு எதிராக அரசாணை வரலாமா.....
நம் நாட்டு
மக்களை, உலகத்தரத்தோடு உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்ய கூடிய தகுதியை, வாய்ப்புகளை
உருவாக்காமல், வெளிநாட்டு பெரிய கம்பெனிகளை, அசுர பலத்தோடு வந்து இறங்கினால்,
இந்நாட்டு சிறு மற்றும் குறம் தொழில்கள் நழிந்து விடும் என்பது நாம் கண்ட உண்மை.
எந்த
ஒரு தொழிலும், இன்றைக்கு இருக்கும் உலக மயமாக்கலின் விளைவால், போட்டியின் அடிப்படையில், தரத்தோடும், குறைந்த விலையிலும், மற்றும் பொருள்
தேவைப்படும் பொழுது சந்தையில் கிடைக்கும் வகையிலும் இருந்தால் மட்டுமே அந்த
தொழில்கள் வளரும். அப்படி இருக்கும் போது,
சாதாரண மக்கள் செய்யும் சிறு மற்றும் குறுந்தொழில்களை ஒழித்து, கார்ப்பரேட்
நிறுவனங்களை இந்த தொழிலில் அனுமதிப்பதென்பது, சாதாரண மக்களை, அவர்களின்
நம்பிக்கையை, வாழ்வாதாரத்தை, அளிப்பதற்கு சமம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
முத்ரா
(MUDRA
– Micro Units Development Refinance Agency) மூலம் கடன் கொடுப்பதாக
ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் SME
சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ரூ 50,000 முதல் ரூ 10 லட்சம்
வரை கடன் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பிரதமர் திரு நரேந்திர மோடியின் நல்ல
திட்டம் இது. இது பல்லாயிரம் சிறு தொழிலை கந்து வட்டி கொடுமையில் இருந்து
காப்பாற்றும். ஆனால் அவர்களை உலகத்தரம் வாய்ந்தவர்களாக உருவாக்குமா? அது தான் கேள்வி.
பல்லாயிரம்
கோடி முதலீட்டில் ஊறுகாய், பட்டாசு பண்ணும் சீன மற்றும் வெளி நாட்டு கம்பெனிகள்
எங்கே. முத்ரா திட்டம் நடைமுறைக்கு வந்து (அதுக்கு இன்றும் ஒரு வருடம் பிடிக்கும்), ரூ 10
லட்சம் கடன் வாங்கி, தொழில் நுட்பத்தை மேம்படுத்தி, ஒரு சிறு தொழில் செய்யும்
சாதாரண இந்தியன், ரூ 1000 கோடி முதலீட்டில் ஊறுகாய், பட்டாசு, மெழுகு வர்த்தி
தயாரிக்கும் சீன நிறுவனத்தோடு போட்டி போட முடியுமா. கம்பெனி நஷ்டப்பட்டு, கந்து வட்டிக்கு கடன்
வாங்கி, சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று நடுத்தெருவிற்கு வந்து, அவன்
சொந்த நாட்டிலேயே அடிமையாகி, அவன் பெரிய கம்பெனிக்கு கூலி வேலைக்கு செல்ல
வேண்டியது தான், இல்லையென்றால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியது தான்.
நமது
நாட்டில் அதிகார வர்க்கத்தின் திட்டமிடுதலுக்கும், செயல் படுத்துவதற்கும்
மிகப்பெரிய இடைவெளி. இந்த இடைவெளி பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் வெளிநாட்டு
முதலீட்டிற்கு குறைவாகவும், நம் நாட்டு சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு
அதிகமாகவும் இருக்கிறது.
அதாவது
சிவகாசி பட்டாசு தொழில் நசுங்குகிறது, பாட்டாசு தொழிலை உலகத்தரத்தோடு போட்டி
போட்டு வளர தடையாக இருக்கும் பழங்கால சட்டங்களை மாற்றுங்கள், சீனாவோடு போட்டி
போட்டு உருவாக்க எங்களுக்கு சட்ட பாதுகாப்பு தாருங்கள், தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு உதவுங்கள் என்று
சிவகாசி பட்டாசு தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் கடந்த 5 வருடங்களாக போராடாத
நாள் இல்லை. அதை விட்டு விட்டு, பட்டாசு தொழில் இனிமேல் சீனாவோடு போட்டி போடலாம்
என்று திறந்து விட்டால். சிவகாசி விரைவில்
அளியும், லட்சக்கணக்காண தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பரிபோகும். சீன பட்டாசு கம்பெனிகள் இந்திய பட்டாசு
கம்பெனிகளை அழித்தொழிக்கும்.
சிவகாசி
பட்டாசு தொழிலாளர்களின் சத்தம் அதிகார வர்கத்தின் காதுகளை தட்ட முடியவில்லை,
சீனாவின் மற்றும் வளர்ந்த நாடுகளின் தொழில் மற்றும் அதிகாரவர்கத்தின் ஆசைகள், இந்தியாவில் அரசு ஆணைகளாக மாறுகிறது. சிவகாசியின் சத்தமே எட்டவில்லை என்றால், கிராமத்தில் ஊறுகாய் போட்டு, மெழுவர்த்தி
உற்பத்தி செய்து பிழைக்கும் சுயஉதவிக்குழக்கள் மற்றும் சோப்பு, சீப்பு செய்யும்
சிறு தொழில்களின் வேதனை சத்தம் மட்டும் எப்படி எட்டும். எட்டாத்தினால் தான்,
இன்றைக்கு 20 சிறு மற்றும் குறும் தொழில்கள் ஒழிக்கப்பட, குடிசைத்தொழில்
ஒழிக்கப்பட விதை விதைக்கப்பட்டிருக்கிறது என்று சிறுதொழில் செய்யும் அனைவரும்
நினைக்கிறார்கள்.
நமது
பிரதமர் மோடி அவர்களை, வளர்ச்சியின் நாயகனாக மட்டுமே பார்த்து, கட்சி, ஜாதி, மதம்
பேதம் இல்லாமல், இந்த நாடு அபிரிமிதமான
ஒட்டுகளில், அதிக எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை அளித்து, ஒவ்வொரு சாதாரண
இந்தியனின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் என்று நம்பி ஒட்டளித்த
மக்களின் நம்பிக்கை பொய்த்துப்போகக் கூடாது.
அந்த
நம்பிக்கை Make in India, Skill India, Digital India, RURBAN Mission and Smart Cities திட்டங்களின்
மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதை நடைமுறை படுத்தும் ஆட்சி முறை
வழியில் பல்வேறு பலவீனங்களும், பழைய நிர்வாக வழிமுறைகளே கையாளப்படுகின்றன. எனவே
தான் மக்களுக்கு இந்த திட்டங்கள் எல்லாம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் வருகிறது.
நமது
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி போன்று மக்களின், இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற
பிரதமரை நம் இளைய தலைமுறை பார்த்ததில்லை. அந்த நம்பிக்கை பொய்த்துப்போய் விட்டால்,
நம் இளைஞர்கள் இனிமேல் யாரையும் நம்ப மாட்டார்கள். சாதரண பொது மக்களின் வாழ்க்கைத்தரத்தை
உயர்த்தாவிட்டாலும் கூட பராவாயில்லை, அவர்களை சுய தொழில் செய்து பிழைக்க விடாமல்
செய்யும் முயற்சியை கண்டறிந்து அதை தடுக்க
வேண்டும். பிரதமர் தனது ஆழ்ந்த ஆட்சிமுறை அனுபவத்தோடு
இது மக்களாட்சி, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆட்சி என்பதை நினைத்து,
எல்லோரையும் இணைத்து செல்லும் Inclusive policy approach கொள்கையை வடிவமைத்து, extractive policies அதாவது
மக்களை சுரண்டி, லஞ்சத்திற்கும், ஊழலுக்கும், ஒழுங்காக உழைக்கும் மக்களை
ஏமாற்றினால் தான் நீ பிழைக்க முடியும் என்று நிலைக்கு தள்ளும் கொள்கைகளை வேரோடும்,
வேரடி மண்ணோடும் கலைந்து, மதச்சார்பற்ற மக்களாட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும்
என்பது தான் பொது மக்களின் உணர்வாக இருக்கிறது.
வளர்ச்சிக்கான
கொள்கைகளை, 64 கோடி இந்திய இளைஞர்களுக்கு
மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பு கிடைக்க, இந்திய தொழில் முனைவோர்களையும், உலக
நிறுவனங்களுக்கு இணையாக வளரும் விதத்தில் போட்டி போட சரி சமமான வாய்ப்பு கொடுத்து, இந்திய பொருளாதாரம், இந்திய மக்களால் கட்டமைக்கப்படும்
விதத்தில் உருவாக்க நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் முன் வர வேண்டும். மக்களுக்கான, மக்களாட்சியை கொடுத்து, இந்திய
மக்களை உலகத்தோடு போட்டியிட்டு வளரவேண்டுமென்றால், இந்தியா செய்ய வேண்டியவைகள்.
1. 20 சிறு மற்றும்
குறுந்தொழில்களை பாதுகாக்கப்பட்ட தொழில்கள் என்ற நிலையில் இருந்து அகற்றும்
முயற்சியை கைவிட்டு, அதை மேம்படுத்தும் தொழில்கள் என்ற நிலையை அளித்து உயர்த்தி, அந்த
சிறு தொழில்களை உலகமயமாக்கலில் போட்டி போட்டு நிற்கும் வகையில், புதிய தொழில்
நுட்பத்தோடு, தேவையான மூதலீட்டை பெறவும்,
குறைந்த வட்டியில் வங்கி கடன் பெறவும், வரி விதிப்பில் மாற்றத்தை கொண்டு
வந்து, நலிந்த தொழில்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்.
2. Make in India திட்டத்தில்
நிர்ணயிக்கப்பட்ட 21 செக்டரில் இந்திய சிறு மற்றும் குறு நிறுவனங்களும் பங்கு
பெறும் வகையில், அவர்களுக்கும் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து, வாய்ப்புகள் கொடுத்து
உலக கம்பெனிகளோடு போட்டி போட்டு வளரும் விதத்தில் உருவாக்குங்கள். ஏனென்றால் இந்த சிறு மற்றும் குறுந்தொழில்
நிறுவனங்களை வழிமுறைப்படுத்தவும் , மேம்படுத்தவும் இதை விட வேறு வாய்ப்பு இல்லை.
3. நிலம்
கையகப்படுத்தும் சட்டத்தில், லாபம் ஈட்டும் தொழில்களை தொடங்கும் திட்டத்திற்கு,
அந்த நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தாமல், விவசாயிகளை அந்த திட்டத்தில் பங்குதாரர்கள்
ஆக்க வேண்டும். எந்த ஒரு கட்டமைப்பு சார்ந்த, உற்பத்தி சார்ந்த கம்பெனிகளும்,
உலகமயமாக்கலில் 10 வருடத்திற்கு ஒரு முறை மாறும், புது கம்பெனிகள் உருவெடுக்கும்,
புது பொருள்கள் உலக சந்தையை ஆக்கிரமிக்கும். ஆனால் பாரம்பரியமாக வந்த நிலம்,
அப்படியே இருக்கும். எனவே விவசாய நிலங்கள் மக்களிடமே இருக்க வேண்டும், விவசாயிகளை
பங்கு தாரர் ஆக்க வேண்டும். விவசாயின் 50 சதவிகிதம் நிலத்திற்கு 4 மடங்கு சந்தை
விலையை கொடுக்க வேண்டும் அதன் மூலமாக அவர்கள் மறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள
உதவும், 50 சதவிகிதம் நிலத்தை, அந்த வருமானம் கொடுக்கும் திட்டத்தில் பங்கு தாரர்
ஆக்க வேண்டும். அப்படி ஆக்கினால், Make-in-India திட்டம் வெற்றி பெறும். அது
மட்டுமல்ல விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும், விவசாயம் சார்ந்த உணவு
உற்பத்திக்கான தொழிற்சாலைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
4. கடந்த 10 ஆண்டுகளில்
சீனா 2000 கி.மீட்டருக்கு நதிகளை இணைத்து, உலகிலேயே சீனா விவசாய உற்பத்தியில்
முன்னிலை வகுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டது. இந்த முறையாவது, நதிகளை இணைக்க அதி திறன் நீர்
வழிச்சாலைகளை அமைத்து, அனைத்து மாநிலங்களும் 1500 பி. சி. எம் வெள்ள நீரில் பாதியாவது
பயன் படுத்தும் திட்டத்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
5. பள்ளிக்கல்வி, உயர்
மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் தேவையற்ற பாட திட்டத்தை நீக்கி, உலகமயமாக்கலோடு போட்டி போடும் பாடத்திட்டத்தை
வைத்து, ஆராய்ச்சிக்கு மற்றும் தொழில்களுக்கு ஏற்ற பாட திட்டத்தை வடிவமைத்து
அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்திய இளைஞர்களை இந்தியாவை நிர்மாணிக்கும்
இளைஞர்களாக மாற்றுங்கள். இந்த கல்வி
நிறுவனங்களை, அதன் செயல்பாட்டை, நிர்வாகத்தை சீரமைக்காமல், உயர் கல்வியில் அன்னிய
பல்கலைக்கழகங்களை அனுமதிக்க கூடாது.
6. வரிவிதிப்பால்
மக்களை வாட்டாமல், வரி வதிப்பதே ஏமாற்றுவதை ஊக்குவிப்பதற்குதான் என்று இன்றைக்கு
இருக்கும் நிலையை மாற்றி, வருமானத்திற்கு வரி விதிக்காமல், செலவுக்கு கூடுதல் வரி
விதித்தால் கிடைக்கும் வருமானம், வருமான வரியை விட அரசிற்கு கூடுதலாகும். அது
மட்டுமல்ல, மக்களை சேமிக்கும் மனநிலையை வளர்க்கும், அது இந்திய பொருளாதாரத்தை
மாற்றும்.
இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம். உலகமயமாக்கலின்
விளைவில் நாம் மட்டும் தப்பிக்க முடியாது.
அதற்காக,
நோயாளியை, நோஞ்சானை, பலசாலியோடு மோத விடும் கொள்கைகளை வகுக்கப்படக்கூடாது. முதலில் இந்தியாவை, இந்தியனை பலப்படுத்துங்கள்,
கல்வியில், மருத்துவத்தில், விவசாயத்தில், தொழில் மற்றும் சேவைத்துறையில்
இருக்கும் ஒட்டைகளை, பலவீனங்களை அடையுங்கள்,
பிரச்சினைகளை கலையுங்கள். முதலில்
இந்தியனை பலப்படுத்தி விட்டு, பிறகு உலக பயில்வான்களோடு மோத விடுங்கள். அவன்
அனைவரையும் தூள் தூளாக்கும் வல்லமையோடு வலம் வருவான். அப்பொழுது தான் இந்தியா தலை நிமிர்ந்து
நிற்கும்.
வெ. பொன்ராஜ்
இந்த கட்டுரை முகநூலில் எழுதிய
கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து.
அறிவியல் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர்.
No comments:
Post a Comment